"இடைகால ஜாமின் பெற்ற கெஜ்ரிவால், முதலமைச்சர் அலுவலகம் செல்லக் கூடாது" - நிபந்தனைகள் விதித்த உச்சநீதிமன்றம்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் உச்சநீதிமன்றம் வழங்கிய நிலையில் சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருப்பதால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தாலும் தொடர்ந்து டெல்லி முதல்வராக நீடித்து வருகிறார். அங்கிருந்து மக்களுக்குக் கடிதங்களையும் அனுப்பி வருகிறார்.
இதற்கிடையே ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. லோக்சபா தேர்தலும் நடக்கும் நிலையில், கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், அதற்கு அமலாக்கத் துறை மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. நேற்று அமலாக்கத் துறை தாக்கல் செய்த அபிடவிட்டில் கூட ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
சட்டம் அனைவருக்கும் சமமானது என்ற அமலாக்கத் துறை பிரசாரம் செய்வது என்பது அடிப்படை உரிமை கிடையாது என்றும் அரசியல் அமைப்பு படி இதற்கு சட்டப்பூர்வ உரிமையும் கிடையாது என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும், எந்த அரசியல் தலைவருக்கும் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்படவில்லை என்ற அமலாக்கத் துறை இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் கூறியிருந்தது.
இந்தச் சூழலில் தான் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறையின் வாதங்களை ஏற்கவில்லை. “கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்குப்பதிவு செய்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், தேர்தலுக்கு வெகு சமீபத்தில்தான் அவரை கைது செய்திருக்கிறீர்கள். மட்டுமல்லாது இந்த வழக்கின் விசாரணை மேலும் நீடிக்கும் என்று தெரிகிறது.
ஆனால் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. எனவே இந்த காரணங்களை கருத்தில் கொண்டு ஜூன் 1ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது” என்று கூறியுள்ளனர். ஜூன் 2ம் தேதி கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மே 18ம் தேதியிலிருந்து உச்சநீதிமன்றம் கோடை விடுமுறைக்கு செல்ல இருப்பதால் தற்போது ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு காரணங்கள்தான் கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு காரணமாகும்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீனை வழங்கி உச்சநீதிமன்றம் முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது. நிபந்தனைகள் என்னவென்றால், அரவிந்த் கெஜ்ரிவால் அரசு சார்ந்த பணிகளில் ஈடுபட கூடாது. குறிப்பாக, முதலமைச்சர் அலுவலகம் செல்ல கூடாது, கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது,முதல்வர் அலுவலகத்திற்கான வேளைகளில் ஈடுபட கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் ரீதியான கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. மேலும், இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்களை அழிக்கும் வேளையில் ஈடுபடக்கூடாது போன்ற முக்கிய நிபந்தனைகள் உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.