பாஜக கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி...!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது நான்கு கோடி கடத்தப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூன்று பேரிடம் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். விசாரணையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வழக்கில் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் வழங்கப்பட்டு விசாரணை நடந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உட்படுத்தினார்.
இந்த நிலையில் சிபிசிஐடி நடவடிக்கைக்கு எதிராக கேசவ விநாயக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் கேசவ விநாயகம் விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டும் என சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது நான்கு கோடி கடத்தப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.