பயங்கரவாதத்துக்கு ஆதரவு!. "ஹிஸ்ப் உத் தஹ்ரீர்" அமைப்புக்கு இந்தியாவில் தடை!. மத்திய அரசு அதிரடி!
Hizb-ud-Tahrir: உலகளாவிய பான்-இஸ்லாமியக் குழுவான ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் (HuT)-ஐ தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
1953 ஆம் ஆண்டு ஜெருசலேமில் ஹிஸ்ப் உத் தஹ்ரீர் இயக்கம் தொடங்க்கப்பட்டது. இந்த இயக்கம் உலகம் முழுதும் இஸ்லாமிய அரசை நிறுவி, இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி செய்வது என்ற குறிக்கோளை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, குழுவின் தலைமையகம் லெபனானில் உள்ளது, இது ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட குறைந்தது 30 நாடுகளில் செயல்படுகிறது.
இந்தநிலையில், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் இயக்கத்தை சேர்ந்தவர்கள், இந்திய இளைஞர்களை ஏமாற்றி ISIS போன்ற பயங்கரவாத அமைப்புகளில் சேர்த்தல், மற்றும் ஊக்குவிப்பது, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது.
இந்த வழக்கில், தமிழகத்தில் உள்ள ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்பைச் சேர்ந்த ஏழு பேர் என்.ஐ.ஏ.,வால், கடந்த 8ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜம்மு - காஷ்மீரில் பிரிவினைக்கு ஆதரவாக இந்த அமைப்பைச் சேர்ந்தோர் பாகிஸ்தானிடம் உதவி கேட்டது தெரியவந்தது.
இந்தநிலையில், இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தள பக்கத்தில், இந்த அமைப்பு பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத அமைப்புகளில் சேர, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற பயங்கரவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்கும் வகையில் இந்த இயக்கத்திற்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த அமைப்பின் நாசக்கார திட்டத்தை அறிந்துகொண்ட ஜெர்மனி, எகிப்து, இங்கிலாந்து மற்றும் பல மத்திய ஆசிய மற்றும் அரபு நாடுகளும் இதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.