அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் : 'ஜனநாயகத்தின் வெற்றி'என நெகிழ்சியாக பதிவிட்ட சுனிதா கெஜ்ரிவால்!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, "ஜனநாயகத்தின் வெற்றி" என சுனிதா கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, "ஜனநாயகத்தின் வெற்றி" என சுனிதா கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “ஹனுமான் ஜி கி ஜெய். இது ஜனநாயகத்தின் வெற்றி. இது கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை மற்றும் ஆசீர்வாதத்தின் விளைவு. அனைவருக்கும் மிக்க நன்றி” என ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வரும்போது அவரை வரவேற்க சுனிதா கெஜ்ரிவாலும் திகார் சிறைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) இடைக்கால ஜாமீனை ஹனுமான் தனது பக்தரான கெஜ்ரிவாலுக்கு அளித்த ஆசீர்வாதம் என்று விவரித்தது.
நேற்று, ED தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கெஜ்ரிவால் போட்டியிடும் வேட்பாளராக இல்லாவிட்டாலும் எந்த அரசியல் தலைவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்படவில்லை என்றும், அவர் காவலில் இருந்தால் போட்டியிடும் வேட்பாளர் கூட தனது சொந்த பிரச்சாரத்திற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதில்லை என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 123 தேர்தல்கள் நடந்துள்ளதாகவும், பிரச்சாரத்திற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட வேண்டுமானால், தேர்தல்கள் ஆண்டு முழுவதும் நடக்கும் நிகழ்வுகள் என்பதால் எந்த அரசியல்வாதியையும் கைது செய்யவோ அல்லது நீதிமன்ற காவலுக்கு அனுப்பவோ முடியாது என்று ED வாதிட்டது.
முந்தைய விசாரணைகளில், நடந்து வரும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஆம் ஆத்மி தலைவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை என்றும், முதல்வர் கெஜ்ரிவால் வழக்கமான குற்றவாளி என்பது அல்ல என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஏப்ரல் 10 ஆம் தேதி தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார், இது ED கைதுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. ஆம் ஆத்மி தலைவர் மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்டார், அன்றிலிருந்து காவலில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.