டெல்லி போலீஸ் அனுப்பிய சம்மன்... "இதற்கு எல்லாம் நான் அஞ்ச மாட்டேன்" தெலுங்கானா முதல்வர் அதிரடி...!
எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவதற்காக சிபிஐ, ஐடி, அமலாக்கத்துறை போன்றவற்றைப் பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும், தற்போது டெல்லி போலீஸாரையும் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறத் தொடங்கியுள்ளனர் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எஸ்.சி , எஸ்.டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியதாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததோடு பா.ஜ.க 400 இடங்கள் வெற்றி பெற்றால் இட ஒதுக்கீடு ரத்து செய்து விடுவார்கள் என கருத்து தெரிவித்து வந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அமித்ஷாவின் பேச்சை எடிட் செய்து தவறான வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாக கூறி தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மே 1-ம் தேதி ரேவந்த் ரெட்டி பயன்படுத்திய அனைத்து மின்னணு உபகரணங்களையும் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவதற்காக சிபிஐ, ஐடி, அமலாக்கத்துறை போன்றவற்றைப் பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும், தற்போது டெல்லி போலீஸாரையும் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறத் தொடங்கியுள்ளனர். இதற்கெல்லாம் தான் அஞ்சப் போவது கிடையாது.. என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.