Summer heat: 100 டிகிரி அளவுக்கு பதிவான வெப்பம்!… கோடை காலம் துவங்கும் முன்பே வாட்டி வதைக்கும் வெயில்!
Summer heat:சில நாட்களில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், இப்போதே ஈரப்பதத்தின் அளவு குறைந்து தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. அதிலும் மக்கள்தொகை நிறைந்து எப்போதும் பரபரப்பாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் நிறைந்த இந்த சென்னை மாநகரில் கோடை காலத்தின் தாக்கம் ஆக்ரோஷமாக இருக்கும். சூரியனின் தாக்கத்தால் எழும் வெப்பம் ஒரு புறம், அதிகப்படியான வாகனங்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருப்பதால் ஏற்படும் வெப்பம் மறுபுறமும் சேர்ந்து சென்னையை வெப்பத்தில் மிதக்க வைக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடைகாலத்தின் தாக்கம் இருக்கும். இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் கோடை காலம் தொடங்க இருக்கிறது. எனினும் தற்போதே கோடை காலம் தொடங்கியது போன்று பல இடங்களில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் தற்போது காற்றில் ஈரப்பதத்தின் அளவு குறைந்து வெயில் கொளுத்த தொடங்கி விட்டது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் அனலைக் கக்கியது. அதிகபட்சமாக ஈரோட்டில் நேற்று 100.4 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவானது. ஈரோட்டில் கடுமையான வெயிலின் தாக்கத்தால், பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது. அதேபோன்று, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் அதிகாலை நேரத்தில் இன்னும் பனி தாக்கமும் இருந்து வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் பனி முற்றிலும் விலகி வெயில் தாக்கம் தொடங்கி விடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
English summary:The scorching sun before the start of summer