For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகிழ்ச்சி செய்தி..! கோடைக்கால சாகுபடி... விவசாயிகளுக்கு 50 % மானியம்...!

06:20 AM Apr 29, 2024 IST | Vignesh
மகிழ்ச்சி செய்தி     கோடைக்கால சாகுபடி    விவசாயிகளுக்கு 50   மானியம்
Advertisement

கோடை சாகுபடிக்குத் தேவையான விதைகள் மற்றும் உயிர் உரங்கள் அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பில் உள்ளன.

Advertisement

சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துவரும் சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் வேளாண்மைத் துறையால் தெரிவிக்கப்படும் சிறப்பு சாகுபடி திட்ட முறைகளை கையாண்டு கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களது சாகுபடி பயிர்களைப் பாதுகாத்து, அதிக இலாபம் பெற்றிடலாம். குறிப்பாக, கோடை வெயிலின் காரணமாக நிலத்தில் உள்ள ஈரப்பதம் விரைவாக குறைந்திட வாய்ப்புள்ளதால் தேங்காய் மட்டை, நார்களைக் கொண்டு மா, பலா, வாழை, பழ வகைச் செடிகள், மலர் செடிகள் உள்ளிட்ட சாகுபடிப் பயிர்களின் அடிப்பகுதிகளைச் சுற்றிலும் தரையில் பரப்பி வைத்து மூடாக்கு அமைத்திடலாம்.

மேலும், தேவைக்கேற்ப மலர் செடி, கொடிகள், பழச் செடிகள் ஆகியவற்றிற்கு மேல் தற்காலிக நிழல் வலைகள் அமைத்துக் கொள்வதால் வெயிலின் தாக்கத்தால் மகசூல் குறைவதை விவசாயிகள் தவிர்க்க முடியும். குறிப்பாக, பழ வகைகள் உள்ளிட்ட எவ்வித பயிர்களைச் சாகுபடி செய்வதாக இருந்தாலும் வறட்சியைத் தாங்கக் கூடிய பயிர்களையே தேர்வு செய்து பயிரிடலாம். கோடை காலத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி சொட்டு நீர் பாசன முறையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு விவசாயிகள் தங்களது பயிருக்கு காலை 8 மணி அல்லது 9 மணிக்குள் மற்றும் மாலை 5 மணிக்குப் பின் நீர் பாய்ச்சிட உகந்த நேரமாகும். குறிப்பாக, கோடை மழை பெய்யும் போது விவசாயிகள் தங்களது நிலத்தில் கோடை உழவு செய்திட வேண்டும்.

இதனால் மண்ணின் அடியில் உள்ள களை விதைகள் மற்றும் தீமை செய்யும் பூஞ்சாணங்கள், பூச்சிகள் அழிக்கப்படும். மேலும், மழை நீர் மண்ணுக்கடியில் எளிதில் புகுந்து ஈரப்பதத்தை தக்க வைப்பதுடன் பயிரின் வேர்கள் எளிதில் மண்ணில் பரவி உர தேவையை குறைத்து செழிப்பாக வளர்வதுடன் கூடுதல் மகசூல் கிடைத்திட வாய்ப்பாக அமைகிறது. அதேபோன்று, அதிக நீர் தேவையின்றி குறைந்த சாகுபடி செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய எள் பயிரையும் கோடையில் சாகுபடி செய்யலாம். எள் சாகுபடி செய்ய ஏக்கருக்கு 2 கிலோ விதை அளவே போதுமானதாகும். எள் பயிர் அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வளரக் கூடியது.

மேலும், நிலக்கடலைப் பயிரை நல்ல நீர் ஆதாரம் உள்ள மேட்டுப்பாங்கான நிலங்களில் பயிரிட்டு அதிக இலாபம் ஈட்டலாம். கோடை சாகுபடிக்குத் தேவையான விதைகள் மற்றும் உயிர் உரங்கள் அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பில் உள்ளன. விவசாயிகள் இதனை 50 சதவிகித மானியத்தில் பெற்றுப் பயன்பெறலாம்.

திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் ஆதாரம் உள்ள விவசாயிகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் எள். நிலக்கடலை மற்றும் பயறு வகை சாகுபடி செய்து அதிக இலாபம் பெறலாம். மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு வேளாண் வானிலை வலையிணைப்பான www.agritech.tnau.ac.in என்ற இணைதளத்தில் சேலம் சந்தியூர் வேளாண்மை அறிவியல் மையத்தால் (KVK) வழங்கப்படும் வானிலை முன் அறிவிப்பினை தங்களது செல்போனில் இருந்தவாறு பார்த்து தெரிந்துகொண்டு அதற்கேற்ப வேளாண் பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement