ராமர் கோயிலில் தற்கொலைப்படை தாக்குதல் எச்சரிக்கை..!! காப்பாற்றப்போகும் AI தொழில்நுட்பம்..!!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின்போது தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ராமர் கோயிலில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக அயோத்தி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படையிடம் (எஸ்பிஜி) அயோத்தி நகர பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு படை, தீவிரவாத தடுப்புப் படை, சிறப்பு கமாண்டோ படை, சிஆர்பிஎப், மத்திய தொழில் பாதுகாப்பு படை, மாநில போலீஸார் என சுமார் 30,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அயோத்தி நகரை 24 மணி நேரமும் கண்காணிக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
10,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் எனும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை சுட்டு வீழ்த்தும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ட்ரோன்களை முடக்கும் தொழில்நுட்ப வசதியும் அயோத்தி கோவிலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தயாராக உள்ளனர். சராயு நதிக்கரை என்பதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், நீச்சல் வீரர்கள், தீயணைப்பு வீரர்களும் தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர்.