TNPSC தேர்வில் இப்படி ஒரு குளறுபடியா..? கொந்தளித்த ராமதாஸ்..!! உடனே உத்தரவிடுங்க..!!
டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு காட்டியதால் நேர்முகத் தேர்வு முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில், ”தமிழக அரசின் வேளாண் துறையில் வேளாண் அலுவலர், தோட்டக் கலை அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. அரசுப் பணிகளுக்கான ஆட்தேர்வில் முறைகேடு செய்வதற்கான கருவியாக நேர்முகத் தேர்வுகள் பயன்படுத்தப்படும் நிலையில், அதை ரத்து செய்வதற்கு அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.
நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. வேளாண் அதிகாரிகள், தோட்டக்கலை அதிகாரிகள் உள்ளிட்ட பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் எழுத்துத் தேர்வுக்கு 450 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வுக்கு 60 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டன. எழுத்துத் தேர்வில் சரியான விடைகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரர்களைப் பொறுத்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பலருக்கு நேர்முகத் தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை அதிகாரிகள் பணிக்கான எழுத்துத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த தேர்வர்களின் மதிப்பெண்கள் முறையே 367.50, 361.50, 358.50 ஆகும். இந்த மூவருக்கும் நேர்காணலில் தலா 36 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்றவர்கள் நேர்காணலில் எப்படி குறைந்த மதிப்பெண்களை பெற முடியும்? என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆள்தேர்வுகள் ஐயத்திற்கு அப்பாற்பட்டவையாக இருக்க வேண்டும். அத்தகைய நம்பகத் தன்மையை ஏற்படுத்த அனைத்துப் பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். வேளாண் அதிகாரி, தோட்டக்கலை அதிகாரி பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகளில் முறைகேடு நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். இந்த நேர்முகத் தேர்வுகளின் போது செய்யப்பட்ட காணொலி பதிவுகளை பொதுமக்களின் பார்வைக்காக தேர்வாணையம் வெளியிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி நக்மாவா..? அட அவரு இல்லையாமே..!! அப்படினா வேற யாரு..?