தொடர் வெற்றி!. இந்திய வீராங்கனைகள் அபாரம்!. 78 ரன்கள் வித்தியாசத்தில் UAEW தோல்வி!
Womens Asia Cup T20: மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையில் மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா மகளிர் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய மகளிர் அணி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான 5ஆவது போட்டி தம்புல்லாவில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஐக்கிய அரபு நாடுகள் மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 13 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா 18 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட்டாகினார்.
தயாளன் ஹேமலதா 2 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ரிச்சா கோஷ் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியை காட்டினர். ஹர்மன்ப்ரீத் கவுர் 47 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிச்சா கோஷ் 29 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 64 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 202 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு நாடுகள் மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஈஷா ரோகித் நிதானமாக விளையாடி 38 ரன்கள் சேர்த்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனையினர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். கடைசி வரை விளையாடிய கவிஷா எகொடகே 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
இறுதியாக ஐக்கிய அரபு நாடுகள் மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய மகளிர் அணி விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்ப்ர 1 இடத்தில் உள்ளது. இந்த போட்டியைத் தொடர்ந்து வரும் 23 ஆம் தேதி இந்தியா மகளிர் அணியானது நேபாள் மகளிர் அணியை எதிர்கொள்கிறது.
Readmore: நாடுமுழுவதும் வேகமெடுத்த தொற்றுநோய்கள்!. ஜிகா வைரஸால் 28 பேர் பாதிப்பு!. பீதியில் மக்கள்!