சூப்பர்...! புயலால் சான்றிதழ் இழந்த மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்...! முற்றிலும் இலவசம்
ஃபெஞ்சல் புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள 6 மாவட்டங்களில் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் மறு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பத்தையும் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் டிச 3ம் தேதி நாளிட்ட செய்தி வெளியீடு எண்:2110-ல் ஃபெஞ்சல் புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கிட ஆணை வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர் பட்டயத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் தங்களது மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், தங்கள் மாவட்டத்தில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம் அல்லது மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேற்காண் விண்ணப்பத்திற்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.