10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதா மாணவர்கள் நாளை முதல் மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!
இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in அல்லது https://results.digilocker.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் எனவும், மேலும் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொள்வதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 மாணவிகள், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகள், 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன்படி 91.55% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 94.53 சதவீத மாணவிகள், 88.58 சதவீத மாணவர்கள் ஆகும். இந்த முறையும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே 5.95% தேர்ச்சி சதவீதம் அதிகம். இந்த தேர்வில் பாடம் வாரியாக தேர்ச்சி விகிதத்தில், தமிழில் 96.85 %, ஆங்கிலம் - 99.15%, கணிதம் - 96.78 %, அறிவியல் - 96.72 %, சமூக அறிவியல் - 95.74% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில், தேர்வில் வெற்றிபெறாத மாணவர்களுக்கு, முதல் துணைத் தேர்வு ஜூலை 2ஆம் தேதி அன்று தொடங்கும் எனவும், இந்த துணை தேர்வுக்கு மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு மே 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.