ஜப்பானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! அச்சத்தில் ஓடிய மக்கள்..!! சுனாமி எச்சரிக்கை..!!
ஜப்பானில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீவு நாடான ஜப்பான் நிலநடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய இடத்தில் பூகோள ரீதியாக அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். ஜப்பானில் உள்ள வீடுகளும் இதற்கு ஏற்றவாறு தான் கட்டப்பட்டுள்ளது. சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அங்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்படும்போது அங்கு கடுமையான பாதிப்பு நிகழ்ந்துவிடும்.
இந்த ஆண்டு துவக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 260 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜனவரி மாதத்தில் முதல் 10 நாட்களில் மட்டும் சுமார் 1,300 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தான், இன்று ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கியாஷூ பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. இரண்டாவது நிலநடுக்கமானது 7.1 ஆக பதிவானது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. அங்குள்ள நேரப்படி மாலை 4 மணியளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கங்களால், சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.