”இனி பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள்”..!! சட்டத்திருத்த முன்வடிவை தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பான சட்டத்திருத்த முன்வடிவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரை தவிர்த்து மற்றொருவரும் தொடர்பில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “யார் அந்த சார்” என்ற பதாகைகளுடன் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், தொடர்ந்து 3 நாட்களாக சட்டமன்றத்திற்கு கருப்பு நிற சட்டை அணிந்து வந்த அதிமுகவினர் “யார் அந்த சார்” என்கிற வாசகம் அடங்கிய பேட்ஜ் மட்டும் அணிந்து, வழக்கம் போல வெள்ளை நிற சட்டையுடன் சட்டமன்றத்திற்கு வந்தனர். இந்நிலையில் தான், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பான சட்டத்திருத்த முன்வடிவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரமும், அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரமும் சட்டப்பேரவையில் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் தான், இந்த குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் விதிக்கும் வகையில், மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.