ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது..!! 3 நாட்களுக்கு கனமழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
பருவமழை காரணமாக தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது மேற்கு திசையில் நகர்ந்து நேற்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவியது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வும் பகுதி வலுப்பெற்றது.
மேற்கு-வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.