வலுப்பெற்று, 18 கி.மீ. வேகத்தில் நெருங்கும் ஆபத்து..! 24 மணி நேரத்தில் உருவாகும் "மிக்ஜாம்" புயல்…
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது, சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு 510 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து சுமார் 630 கிலோ மீட்டர் தென் கிழக்கு திசையிலும், பட்லாவிலிருந்து 710 கிலோமீட்டர் தெற்கு தென்கிழக்கு திசையிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து தெற்கு தென் கிழக்கு திசையில் 710 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். பின்னர் புயலாக வலுபெற்றபிறகு இந்த புயலுக்கு வானிலை ஆய்வு மையம் மிக்ஜாம் என்று பெயரிடப்படும். இது முதலில் கரைக்கு மிக அருகில் தான் புயலாக வலுப்பெறும் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது வங்கக்கடலிலையே புயலாக வலுப்பெற்று அதனுடைய நகர்வுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் 5-ம் தேதி மதியம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இதன் காரணமாக சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.