யூடியூப் சேனல்கள் மீது பாயும் நடவடிக்கை..!! ராதிகா வைத்த செக்..!! உதயநிதிக்கு பறந்த கோரிக்கை..!! மீனாவும் ஆதரவு..!!
யூடியூப் சேனல்களில் நடிகர், நடிகைகள் குறித்து அவதூறாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகை ராதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து நடிகை ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, பிரபல தெலுங்கு நடிகரான விஷ்ணு மஞ்சு தன்னுடைய பர்சனல் விஷயங்களை பற்றி மோசமாகவும், அவதூறாகவும் வீடியோவாக பதிவு செய்த யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இது தெலுங்கு திரையுலகில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த செய்தி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்தப் பதிவை நடிகை ராதிகா ஸ்கிரீன்ஷாட் ஆக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், நடிகர் விஷ்ணு மஞ்சுவை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இது போல் தமிழ் நடிகர்கள் சங்கமும் விழித்துக் கொள்ள வேண்டும். தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று நினைத்துக் கொள்ளும் சிலர் பயனற்ற தகவல்களையும், திரையுலகினரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய பொய்களையும், மிகைப்படுத்திய செய்திகளையும் வெளியிட்டு தனிப்பட்ட ஒருவரின் குணாதிசயங்களை படுகொலை செய்து வருகின்றனர்.
கண்டிப்பாக இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குறிப்பாக, தமிழ்நாடு அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசுடன் இணைந்து இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு நடிகை மீனா, ராதிகா சொன்ன கருத்தை நான் ஆதரிக்கிறேன். பொறுப்பற்ற சில யூடியூபர்கள் மற்றும் சில வெறுப்பாளர்கள் வரம்பு மீறி சில விஷயங்களை கூறி வருகின்றனர். முட்டாள்தனமான சில விஷயங்களை பரப்பி வருகின்றனர்.
பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். குறிப்பாக பெண்களை மோசமாக தாக்குகின்றனர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு தனிப்பட்ட நபர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கக்கூடாது. இந்த மாதிரி அடுத்தவர்களைப் பற்றி தவறாக பேசும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுகளுக்கு இணையத்தில் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.