சென்னையில் கரையை கடக்கும் புயல்!… வேதாரண்யம் முதல் கல்பாக்கம் வரை பெரும் தாக்கம் இருக்கும்!
மிக்ஜாம்' என பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கலாம் என்றும், கல்பாக்கம் துவங்கி வேதாரண்யம் வரையிலான கடலோர பகுதிகளில், அதன் தாக்கம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை கடந்த இரண்டு வாரங்களாக, தமிழகத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை, பெரும்பாலான மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது தமிழகம், புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களில், சூறாவளி காற்று மற்றும் மழையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தெற்கு அந்தமான் பகுதியில் நிலவுகிறது.
இந்த பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின், டிச., 2ம் தேதி புயலாக உருவெடுக்கும். அதன் நகர்வு, உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில், மூன்று வகைகளில், புயலின் அடுத்த கட்ட நகர்வுகள் உள்ளன. இரண்டு நாட்களில், அதன் சரியான நகர்வு தெரிவிக்கப்படும். இலங்கையின் வடக்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், மிதமான மழை பெய்யும். அதிகபட்சமாக, 29 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
அந்தமானின் தெற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு பகுதிகள்; வங்கக் கடலின் தெற்கு, தென் மேற்கு, மத்திய பகுதிகளில், மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் வரும் 3ம் தேதி வரை, இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். மிக்ஜாம்' என பெயரிடப்பட உள்ள இந்த புயல், சென்னைக்கு அருகில் அல்லது வேதாரண்யம் முதல் கல்பாக்கம் வரையிலான கடலோரப் பகுதிகளில் கரை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், நாகை, கடலுார், புதுச்சேரி மட்டுமின்றி, ஆந்திராவில் மசூலிப்பட்டினம், விசாகப்பட்டினம் வரை உள்ள கடலோரம் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் பெரும் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது