இன்று உருவாகும் புயல்... 24 மணி நேரமும் மக்கள் பணி...! அதிகாரிகளுக்கு தமிழக போட்ட அதிரடி உத்தரவு...!
இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் புயல், நாளை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து ஐந்தாம் தேதி ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலானது கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:
மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையம், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு மற்றும் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து 24X7 மணி நேரமும் பணியாற்றிட முறைப்பணி முறையில் உதவி செயற் பொறியாளர்கள்/உதவி பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றிட வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள 44 மின் பகிர்மான வட்டங்களில் உள்ள மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகங்களிலும் 24X7 மணி நேரமும் முறைப்பணி முறையில் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றிட வேண்டும். மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இயங்கும் நிலையில் இருப்பதையும் மற்றும் தேவைப்படும் அனைத்து தளவாடப் பொருட்களையும் இருப்பில் வைத்துக் கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜே.சி.பி., கிரேன்கள் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களின் தொலைபேசி எண்களை முன்னமே கேட்டறிந்து அவைகளின் தயார்நிலை உறுதி செய்யப்பட வேண்டும். சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும். பேரிடர் காலங்களில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள், திருமண மண்டபங்கள். சமுதாயக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். வாரிய வாகனங்கள் அனைத்தும் செப்பனிடப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மின் தடங்கல் ஏற்படின் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள். வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும். உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும். தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்க வேண்டும். அனைத்து அலுவலர்களும் தங்களது அலைபேசியினை எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளும் நிலையில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.