Sterlite Plant: மக்களின் ஆரோக்கியத்தையும் நலனையும் பாதுகாக்க வேண்டும்!… உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் வாதம்!
Sterlite Plant:தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிபுணர் குழு அமைத்து அதன் பரிந்துரைகளின்படி செயல்பட அனுமதித்தாலும், நிபந்தனைகளை, ஆலை நிர்வாகம் பூர்த்தி செய்யும் என்பதை நம்ப முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பான விசாரணை மீண்டும் இன்று நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் 2020ல் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.வி. பார்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் நேற்று விசாரணை நடைபெற்றது.
ஆலை நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சுற்றுச்சுழல் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிக்க தயாராக உள்ளது. ஆனாலும், அரசியல் காரணத்திற்காக அதை திறக்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது என்று வாதிட்டார். அப்போது, குறுகிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் ஆட்சேபணைகளை புறந்தள்ளிவிட முடியாது, அப்பகுதி மக்களின் நிலையையும் அவர்களின் கருத்துக்களையும் ஒதுக்கிவிடமுடியாது. இந்த விவகாரத்தில் மக்களின் நலனே முக்கியம் என கூறினார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு விதிக்கும் அனைத்து விதிகளையும் பின்பற்ற தயாராக இருப்பதாக ஆலை நிர்வாகம் கூறுகிறது. ஆனால் ஏற்கனவே மாசு கட்டுப்பாட்டு வாரியம் வகுத்த விதிகளை ஆலை நிர்வாகம் மீறி உள்ளது. அதனால் அதற்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், ஆலை விவகாரத்தில் முடிவெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் தான் அரசு முடிவு செய்தது என வாதிட்டார், ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆலையை மூடக்கோரும் பின்னணியில் இருப்பது ஒரு என் ஜி ஓ. அது வெளிநாட்டு சதியுடன் செயல்பட்டது தெரியவந்ததால், அதன் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்துள்ளது.
தாமிரம் என்பது இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம், அது கச்சா எண்ணெய் வளத்தை போன்றது. அதனால் அதன் உற்பத்தியை முடக்க வெளிநாட்டு சதி நடக்கிறது. அதன் ஒருப்பகுதியே இந்த ஆலை மூடல் போராட்டம் என கூறினர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளால் தான் பிரச்சனை என்றால் அதை அகற்றுவது யார்? அந்த ஆலைக்கு பல கடுமையான நிபந்தனைகளை விதித்து அது இயங்க ஏன் அனுமதிக்கக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், கழிவுகளை ஆலை தான் அகற்றவேண்டும். இல்லையென்றால், அதன் செலவில் அரசு கழிவுகளை அகற்றும் என்று பதிலளித்தார்.
மேலும் ஏற்கனவே ஆலைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்படாத நிலையில் மீண்டும் சில நிபந்தனைகள் விதித்தாலும் அதனை ஆலை நிர்வாகம் பின்பற்றும் என நம்பமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அனைவரது வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் இன்றைக்கு(வியாழன்) ஒத்திவைத்தனர்.
English summary:Sterlite Plant: Argument again in the Supreme Court today