மகிழ்ச்சி..! ஜனவரி 15-ம் தேதிக்குள் அனைவருக்கும் இலவச வேட்டி, சேலைகள்...!
வரும் ஆண்டு ஜனவரி 15-ம் தேதிக்குள் அனைவருக்கும் இலவச வேட்டி, சேலைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையின்போது, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நியாய விலைக்கடைகளின் மூலம் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் கைத்தறி மற்றும் பெடல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், கைத்தறி மற்றும் பெடல்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கிறது.
இந்த நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறுவதை முன்னிட்டு இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்குத் தேவைப்படும் வேட்டி சேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்து வழங்கிட ஏதுவாக நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்பணமாக வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் 100 கோடி ரூபாய் அனுமதித்து உத்தரவிட்டார். இத்திட்டத்தின் மூலம் 2025 தைப் பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஏழை மக்களுக்கு ஏறத்தாழ 1 கோடியே 77 இலட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், அதே போல ஏறத்தாழ 1 கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் நகர அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
வரும் ஆண்டு ஜனவரி 15-ம் தேதிக்குள் அனைவருக்கும் இலவச வேட்டி, சேலைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; மக்களவைத் தேர்தல் காரணமாக, பொங்கல் இலவச வேட்டி, சேலை பணிகள் தாமதமாகின. கடந்த ஆண்டு டிச.31-ம் தேதிக்குள் அனைத்து வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டன. வரும் ஆண்டு ஜனவரி 15-ம் தேதிக்குள் அனைவருக்கும் இலவச வேட்டி, சேலைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.