அரசு மருத்துவமனைகளில் 2,253 மருத்துவர்களை பணியமர்த்த நடவடிக்கை...! அமைச்சர் மா.சு தகவல்
அரசு மருத்துவமனைகளில் புதிதாக உருவாகும் காலி பணியிடங்களை சேர்த்து 2,253 மருத்துவர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியம்; மகப்பேறில் மகளிர் இறப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. 2020 - 21ல் ஆயிரம் குழந்தைகள் பிறந்தால், பிறக்கும் சமயத்தில் மரணிக்கும் குழந்தைகள் விகிதம் 9.7 சதவிகிதமாக இருந்தது. இது, 2023-24ல் 8.2 சதவிகிதமாகவும் நடப்பாண்டில் 7.7 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. இந்த ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் மூலம் 7 லட்சம் மகளிர் பயன்பெற்று வருகிறார்கள்.
நடப்பாண்டில் 3,02,043 மகளில் பயன்பெற்றுள்ளார்கள். ஆனாலும், கடந்த வாரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் ஒரு தற்காலிக பணியாளரும் ஒரு நிரந்தர பணியாளரும் மோசடியில் ஈடுபட்டது தணிக்கையின் மூலம் தெரிய வந்தது. பல்வேறு போலி கணக்குகளை உருவாக்கி 18 லட்சம் வரை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் வேறு மாவட்டத்தில் மோசடி நடந்துள்ளதா என்பதை மாவட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் புதிதாக உருவாகும் காலி பணியிடங்களை சேர்த்து 2,253 டாக்டர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் இருக்கும் இடங்களில், சில சமயங்களில் டாக்டர் இல்லையென்றால், டாக்டர் பற்றாக்குறை உள்ளதாக புரிதல் இல்லாமல் வதந்தி பரப்புகிறார்கள். கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் ஒரு டாக்டர்தான் இருப்பார். சில நேரங்களில் டாக்டர் பணியில் இல்லாவிட்டால், அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம், அல்லது டாக்டரை சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவழைத்தும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றார்.