அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிநவீன சிகிச்சைகள்..!! என்னதான் ஆச்சு..? வெளியான பரபரப்பு தகவல்..!!
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாத்துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, அவருக்கு மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதயம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கழுத்து வலிப்பதாக கூறியதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என மருத்துவர் பரிந்துரைத்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதால் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கி உள்ளதாகவும், நரம்பியல் மருத்துவர்களும் அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சில பரிசோதனைகள் வெளியில் இருந்து எடுக்கப்பட உள்ளதாகவும், குறிப்பாக நரம்பியல் தொடர்பான அதிநவீன பரிசோதனைகள் மேற்கொள்ள இருப்பதாக மருத்துவமனை சார்பில் கூறப்படுகிறது.