இன்று விண்ணில் பாயும் SSLV-D3 ராக்கெட்!. புவியை கண்காணிக்க இஸ்ரோவின் அடுத்த கட்ட முயற்சி!
SSLV-D3: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு EOS-08 செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்துகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதுதொடர்பான சோதனைகளையும் படிப்படியாக நிகழ்த்தி வருகிறது. இதனை தொடர்ந்து வெள்ளிக் கோளை ஆய்வு செய்யும் சுக்ரயான் திட்டத்தையும் இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது.
இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ , புவி கண்காணிப்பு வானிலை தொடர்பான செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஓராண்டு வரை தனக்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இஒஎஸ்-8 செயற்கைகோள் எஸ்எஸ்எல்வி-டி3 சிறிய ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிர்வாகக் காரணங்களால் ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. அந்தவகையில் இந்த ராக்கெட் இன்று காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. முன்னதாக விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் அதிகாலை 2:30 மணிக்கு துவங்கியது.
இந்த இஒஎஸ்-8 செயற்கைக்கோள் சுமார் 175 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைகோளில் உள்ள ஜிஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும். இது ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வரிசையில் கடைசி ஏவுகணை இது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Readmore: நமக்கும் மாரடைப்பு வந்துவிடுமோ என்ற பயம் இருக்கிறதா..? தினமும் இந்த உணவுகளை சாப்பிடுங்க..!!