12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோவில்.. இவ்வளவு சிறப்புகள் இருக்கா..?
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் ஸ்ரீசைலத்தில் மிகவும் பிரபலமான பிரம்மராம்பா சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோவில் உள்ளது. 12 ஜோதிர்லிங்க சேத்திரங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு மல்லிகார்ஜுன சுவாமியும் பிரம்மராம்பா தேவியும் அருள் புரிகின்றனர். தேவாரம் பாடப்பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம். சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது.
கோயில் வரலாறு : இளவரசி சந்திரவதி சிவனை மணக்க விரும்பி இந்த கானகத்தில் மல்லிகை பூவால் இறைவனை தினமும் பூஜித்து அவரை அடைந்தாள். அதனால் இத்தல இறைவனுக்கு மல்லிகார்ஜுனர் என்ற பெயர் வந்தது. இங்கு நந்தியே மலையாகவும் உள்ளார்.
ஸ்ரீசைலம் மகாபாரதத்திலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்த புராணத்தில் சிறீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று உண்டு. இக் கோயில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது. ஆதிசங்கரர் இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
கௌதம முனிவரின் தவத்தால் மூழ்கிய கங்கை நதி மல்லிகார்ஜுனன் கோயிலில் அருகில் பாதாள கங்கையாக திகழ்கிறது. இதில் நீராடுவதால் பாவங்களை கங்கை போக்குகிறது. மாடு மேய்க்கும் சிவ பக்தரான மல்லண்ணாவின் இறைபக்திக்கு இறங்கி வந்த சிவபெருமான், இந்த புனித ஸ்தலத்தில் அவருக்கு மல்லிகார்ஜுனனாக காட்சியளித்தார்.
பார்வதி தேவி தன்னை தேனீயாக மாற்றி மகிஷாசுரனுடன் போரிட்டு வென்ற பின் தேனீ வடிவிலேயே இக்கோவிலை அடைந்தார். பிரமராம்பா கோவிலில் உள்ள ஓட்டை வழியாக தேனீயின் ரிங்காரத்தை பக்தர்கள் கேட்கிறார்கள். சிவபெருமான் வேட்டைக்காரன் வடிவில் ஸ்ரீசைலம் காட்டிற்கு வந்து, ஒரு செஞ்சு பழங்குடியின பெண்ணைக் காதலித்து மணந்தார். அதனால் அவர்கள் மல்லிகார்ஜுனர் தங்கள் உறவினர் என்று அவரை செஞ்சு மல்லய்யா என்று அழைக்கின்றனர்.
இக்கோயிலில் சிவபார்வதி திருமணம், அர்ஜூன தவம், சந்திரவதி கதை, மார்கண்டேயன் கதை, தட்சனின் யாகம், சிவதாண்டவம், கஜாசுர சம்காரம், சிபி கதை, பாற்கடலைக் கடைதல், கண்ணப்பர் கதை, மகேசுவரர் விஸ்வரூபம், மகிடாசுரமர்தினி போன்ற பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
Read more ; SIP என்றால் என்ன? மாதம் 5000 ரூபாய் டெபாசிட் செய்தால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வளவு கிடைக்கும்?