SUNDAY RECIPE : கொஞ்சம் வித்தியாசமாக இலங்கை ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்து பாருங்க.!
பொதுவாக இந்த உலகில் சைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்களை விட, அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். முன்பெல்லாம் பலரது குடும்பத்திலும் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அசைவம் சமைப்பார்கள். ஆனால் தற்போது வாரத்தில் ஏழு நாட்களும் தொடர்ந்து அசைவம் சாப்பிடுபவர்கள் அதிகமாகி விட்டனர். அந்த அளவிற்கு அசைவ உணவின் சுவை பலருக்கும் பிடித்தமானதாக இருந்து வருகிறது. அப்படியிருக்க வீட்டில் எப்போதும் ஒரே ஸ்டைலில் குழம்பு செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக இலங்கை ஸ்டைல் மட்டன் கறிக்குழம்பு செய்து பாருங்க. எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்?
தேவையான பொருட்கள்
ஆட்டு இறைச்சி - 1/2 கிலோ, தேங்காய் துருவியது - 1 கப், எண்ணெய், கருவேப்பிலை - தேவையான அளவு, எலுமிச்சை - 1 டீஸ்பூன், கடுகு, சீரகம் -1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - சிறிதளவு, மல்லி தூள், மிளகாய் தூள் -1 டேபிள் ஸ்பூன், பிரியாணி இலை -1, பூண்டு -10 பல், வெங்காயம் - 1கப் நறுக்கியது, இஞ்சி - 1துண்டு, தக்காளி - 1கப், கொத்தமல்லி இலை, பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன், கிராம்பு, பட்டை - 1
செய்முறை
முதலில் ஆட்டுக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் கடுகு, சீரகம், பிரியாணி இலை, கிராம்பு, பட்டை போன்றவற்றை போட்டு நன்றாக தாளிக்க வேண்டும். பின்பு இதில் நறுக்கி வைத்த வெங்காயம், இஞ்சி, பூண்டு போன்றவற்றை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். இஞ்சி, பூண்டு வாசனை போகும்வரை வதக்கிய பின்பு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு ஆட்டுகறியை இந்த மசாலா கலவையுடன் சேர்த்து வதக்கவும். பின்னர் துருவிய தேங்காய் மற்றும் பெருஞ்சீரகத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து பால் எடுக்க வேண்டும். இந்த தேங்காய் பாலை கறியுடன் சேர்த்து ஊற்றி 30 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து மல்லி தழை தூவி இறக்கினால் சுவையான இலங்கை ஸ்டைல் மட்டன் குழம்பு தயார்.