ஒரே நிமிடத்தில் வேண்டிய வரம் தரும் நிமிஷாம்பாள் கோவில்.. சென்னையில் எங்க இருக்கு?
சென்னையில் புகழ்பெற்ற கோவில்கள், பழமையான கோவில்கள் என எத்தனையோ கோவில்கள் உள்ளன. ஆனால் பலருக்கும் தெரியாத மிக பழமையான கோவில்கள் சென்னையில் ஏராளமாக உள்ளன. அப்படி நிமிடங்களில் நம் கஷ்டத்தை போக்கும் நிமிஷாம்பாள் ஆலயம் சென்னை பிராட்வேயில் காசிச்செட்டி தெருவில் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாதம் முழுவதும் சிறப்பு விழாக்களும், அலங்காரங்களும் வெகு விமர்சையாக நடைபெறும். இக்கோவில் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டு அமைந்துள்ள இக்கோவிலில் ஸ்ரீநிமிஷாம்பாள் மூலவராக அருளாட்சி புரிகிறாள்.
அருள் தரும் அன்னை நிமிஷாம்பாள் : அன்னை நிமிஷாம்பாளுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் கோவில்கள் உள்ளன. கர்நாடகாவில் தான் அன்னை நிமிஷாம்பாளுக்கு முதன் முதலில் கோவில் எழுப்பப்பட்டது. பிறகு பல இடங்களில் நிமிஷாம்பாள் கோவில்கள் நிறுவப்பட்டு, வழிபடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அன்னை நிமிஷாம்பாளுக்கு கோவில் இருப்பது சென்னை சவுகார்பேட்டை காசி செட்டி தெருவில் மட்டும் தான்.
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள இக்கோவிலில் காமிகாகம முறைப்படி இரண்டு கால பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. துர்கையின் அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால் ராகு காலம், அஷ்டமி நாட்களில் பாலபிஷேகம் செய்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
நிமிஷாம்பாள் பெயர் காரணம் : நிமிஷாம்பாளை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், அந்த பெயருக்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். நிமிஷாம்பாள் என்பதும், பலரும் ஒரு நிமிடத்தில் பக்தர்களின் குறையை தீர்ப்பதால் தான் இந்த அம்மனுக்கு நிமிஷாம்பாள் என பெயர் வந்ததாக சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. நிமிஷம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கண்கள் என்று பெயர். நிமிஷாம்பாள் என்பது, லலிதா சகஸ்ரநாமத்தில் குறிப்பிட்டிருக்கும் அன்னையின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்று. ஒரே ஒரு பார்வையில் பக்தர்களின் துன்பங்களை சம்ஹாரம் செய்து, அவர்கள் வேண்டிய வரங்களை கொடுக்கக் கூடியவள் என்பதால் இந்த அம்பிகைக்கு நிமிஷாம்பாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
கோவில் அமைப்பு : நெருக்கமான கடைகளுக்கு மத்தியில் மூன்று நிலை சிறிய கோபுரங்களுடன் அமைந்துள்ள இக்கோவிலுக்குள் நுழைந்ததும் நிமிஷாம்பாளை தரிசிக்க முடியும். அம்மன் சன்னதிக்கு இடது புறம் விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், சிவன் ஆகிய சன்னதிகளும், பின்புறம் நவகிரக சன்னதியும் உள்ளது. ஆதிசங்கரர் வந்து வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று.
கோவிலுக்குள் நுழைந்தவுடன் முதலில் தென்படுவது கருவறை தான். அதில் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் அம்பாளுக்கு தலைக்கு மேல் தர்ம சக்கரமே குடையாய் அமைக்கப்பட்டுள்ளது. மேல் இரு கரங்களிலும் சூலமும், உடுக்கையும் உள்ளன. கீழ் இரு கரங்களிலும் அபய, வரத ஹஸ்தங்கள். அம்மனுக்கு எதிரில் சிம்ம வாகனமும், சூலமும் காணப்படுகிறது. சிறிய ஆலயமாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம் என்பதால் பலரும் வந்து வணங்கி செல்கிறார்கள். இங்குள்ள வியாபாரிகள் தினமும் காலையில் வந்து இந்த அம்மனை தரிசித்த பிறகே தங்களின் வேலைகளை துவக்குகிறார்கள்.
Read more ; பிகினி ஆடையால் விமர்சனத்திற்கு ஆளான முதல் உலக அழகி.. தனது 95 வது வயதில் மரணம்..!!