சென்னையில் இருந்து கொச்சி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்..!! வானில் வட்டமடித்ததால் பரபரப்பு..!!
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்னையில் இருந்து 117 பேருடன் கொச்சி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. பயணிகள் விமானத்திலேயே அமர்ந்துள்ள நிலையில், இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு வருகிறது. இந்த விமானம் சென்னையில் இருந்து கொச்சி நோக்கி சென்ற நிலையில், சுமார் 15 நிமிடங்களில் வானில் வட்டமடித்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கு அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியுள்ளது. விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு, மீண்டும் கொச்சி புறப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.