பணமோசடி வழக்கு: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் 'ED' காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு.!
சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் மற்றும் நில மோசடி குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நில மோசடி நிலக்கரி சுரங்க மோசடி மற்றும் பண பரிமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜனவரி 31ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரங்களுக்கு மேல் அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சிபி சோரன் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டார். இதன் பிறகு ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி வெற்றி பெற்றது. இந்த வாக்கெடுப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் நீதிமன்ற அனுமதியுடன் கலந்து கொண்டார்.
இந்நிலையில் ஹேமந்த் சோரனின் காவலை 5 நாட்கள் நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்தக் காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில் கமலாக்கு பிரிவினர் மேலும் விசாரிப்பதற்கு கால அவகாசம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹேமந்த் சோரனின் காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.