வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் இன்று சிறப்பு முகாம்!… ஆதார், ரேஷன் கார்டு இலவசமாக பெறலாம்!
மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழை வெள்ளம் காரணமாக தங்களது கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு இலவசமாக சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறுகிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழை நீர் குடியிருப்புகளில் புகுந்து மக்களை அலைக்கழிப்பிற்கு உள்ளாகியது. இதன் காரணமாக மக்கள் தங்கள் உடைமைகளை அனைத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டது. ஏராளமானோர், தங்கள் கல்விச் சான்றிதழ்களையும், அரசு வழங்கும் சான்றிதழ்களையும், மழை வெள்ளத்தில் இழந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு புயல் நிவாரணம் அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின். மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மீண்டும் இலவசமாக சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறப்பு முகாம்கள் நடத்தவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக கல்வி சான்றிதழ்களை இழந்த மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர். மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அல்லது இழந்த அரசு சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இந்த 4 மாவட்டங்களிலும், சான்றிதழ்களை இழந்த மக்களுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில், சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறுகின்றன. சென்னை மாவட்டத்தில், மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் நாளை 12ஆம் தேதி அன்று சிறப்பு முகாம் தொடங்க உள்ளது. சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும். மேற்படி சிறப்பு முகாம்களில், பொதுமக்களின் வசதிக்கென, இ-சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.