தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது!. குவிக்கப்பட்ட 3200 போலீசார்!. பதவியில் இருக்கும் அதிபர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை!. என்ன நடந்தது?.
South Korean President: தென்கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தென்கொரியாவின் அதிபராக இருப்பவர் யூன் சுக் இயோல் ஆவார். இவர் கடந்த மாதம் 3ந் தேதி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது, அரசுக்கு எதிராக சூழ்ச்சிகள் நடப்பதாகவும், வடகொரியாவுடன் இங்குள்ள அதிகாரிகள் தொடர்பில் இருந்து கொண்டு துரோகத்தை செய்து வருவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் அதிரடியாக தென்கொரியாவில் யூன் சுக் இயோல் ராணுவ ஆட்சி சட்டத்தை அறிவித்தார்.
இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நாட்டில் குழப்பான சூழல் நிலவியது. எனவே இந்த சட்டத்தை அகற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்தனா். அப்போது ஆயுதத்துடன் கூடிய ராணுவ வீரர்களும் இங்கு நுழைந்தனா். இதற்கிடையே ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் திரும்ப பெறப்பட்டது. எனினும் தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் அவருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், ராணுவச் சட்டத்தை அறிவிப்பது தொடர்பாக யூன் சுக் இயோல், ரகசிய ஆலோசனைகள் நடத்தியதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும், இதனால் தற்போது பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. இதையடுதது இடைக்கால அதிபராக தென்கொரியாவுக்கு சோய் சாங் மோக் பொறுப்பேற்று கொண்டார்.
இதையடுத்து, தென்கொரியா முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் பதிவான வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மூன்று முறை சம்மன் அனுப்பியும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே தற்போது அவருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாராண்டு பிறப்பித்திருந்தது. இந்தநிலையில், இன்று காலை நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்து யூன் சுக் இயோலை கைது செய்தனர். மலைப்பகுதியில் இருக்கும் வீட்டுக்குள் அவர் பல வாரங்களாக இருந்துவந்தார். அதிபர் பாதுகாப்புச் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அவருக்குப் பாதுகாப்பு வழங்கி வந்தனர். மேலும், அதிபர் பாதுகாப்புப் பிரிவின் தற்காலிகத் தலைவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, யூனின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே சண்டை மூண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும், யூனைக் கைது செய்ய 3,200 காவல்துறை அதிகாரிகள் சென்றதாகத் தென்கொரிய காவல்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.