South Chennai Lok Sabha Results 2024: தென் சென்னையில் தொடர்ந்து திமுக முன்னிலை!!
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார், யார் முன்னிலை வகிக்கிறார் என்பது குறித்த முழு விவரங்களை இந்த இணைப்பில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.
நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மீதமுள்ள 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி, I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பிறக்கட்சியைச் சேர்ந்தவர்கள் களம் கண்டனர். முதல்கட்டத்தேர்தலில் 66.1 சதவிகிதம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தேர்தலில் முறையே 66 புள்ளி 7 மற்றும் 61 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதேபோல் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கட்டத் தேர்தலில் 67.3, 60.5, 63.4 சதவிகித வாக்குகள் பதிவாகின.
கடைசி கட்டத் தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. தேசத்தில் மொத்தம் நாட்டில் வாக்களிக்க தகுதியுடைய சுமார் 97 கோடி பேரில், 64 கோடியே 20 லட்சம் பேர் ஜனநாயக கடமையாற்றியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
தென் சென்னை மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை திமுக சார்பாக தமிழச்சி தங்கப்பாண்டியன், அதிமுக சார்பாக ஜெயவர்தன், பாஜக சார்பாக தமிழிசை சௌந்தர்ராஜன், நாம் தமிழர் சார்பாக சு.தமிழ்ச்செல்வி ஆகியோர் போட்டியிட்டனர். 2019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கிய தமிழச்சி தங்கபாண்டியன் 5 லட்சத்து 64 ஆயிரத்து 872 வாக்குகள் (50.28 %) பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் 3 லட்சத்து 2 ஆயிரத்து 649 வாக்குகள் (26.94%) பெற்றார். அப்போது பாஜக, பாமக ஆகிய கட்சிகள் அதிமுக அணியில் இடம்பெற்றிருந்தன.
நட்சத்திர வேட்பாளர்கள் களம் கண்ட இந்த தொகுதியில் தற்போது திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்க பாண்டியன் முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.