தடையை மீறி புல்டோசர் நடவடிக்கை.. அசாம் அரசுக்கு அவமதிப்பு நோட்டீஸ்..!! - உச்சநீதிமன்றம் அதிரடி
வடமாநிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர்களுடன் சென்று வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி வருகிறது. இந்த புல்டோசர் நடவடிக்கை சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகின்றன. இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் அக்டோபர் 1 வரை புல்டோசர் நடவடிக்கைகளுக்கு இடைக் கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் இந்த உத்தரவை மீறி ஆங்காங்கே புல்டோசர் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட அசாமில் காம்ரூப் மாவட்டத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு எனக்கூறி 47 குடும்பங்களின் வீடுகளை அரசு இடித்துள்ளது. மேலும் காம்ரூப் மாவட்ட சுற்றுவட்டாரத்தில் அதே போல மக்கள் வசிக்கும் வீடுகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி இடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வீடுகளை இழந்த 47 குடும்பங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அனுமதி இல்லாமல் இடைக்காலத் தடை அமலில் உள்ளபோது வீடுகளை இடித்துள்ளதால் அசாம் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. நீதிபதிகள் பி.ஆர்.கவை, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டதுடன், அடுத்த விசாரணை வரை தற்போதைய நிலையே தொடரும் என உத்தரவிட்டது.
Read more ; சென்னை ஐஐடியில் புள்ளி மான்களுக்கு காசநோய் பரவும் அபாயம்..!! – மாதிரிகள் சோதனைக்கு அனுப்பிவைப்பு..