காளான் வளர்ப்பில் தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் சாப்ட்வேர் பிரதர்ஸ்..!
கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரான ரிஷப் குப்தா, கோவிட் சமயத்தில் துபாயில் இருந்த வேலையை விட்டுவிட்டு தனது சொந்த ஊரான ஆக்ராவில் காளான் வளர்ப்பைத் தொடங்கினார். அவரது சகோதரர் ஆயுஷ் அவருடன் இணைந்தார், இருவரும் இப்போது தினமும் சுமார் 1600 கிலோ காளான்களை விற்பனை செய்து ஆண்டுக்கு ரூ. 7.5 கோடி சம்பாதிக்கிறார்கள்.
ரிஷப் குப்தா கணினி அறிவியலில் பொறியியல் முடித்த பிறகு துபாயில் உள்ள Mashreq வங்கியில் பணிபுரிந்தார். உலகம் COVID-19 உடன் போராடிக் கொண்டிருந்தபோது, சொந்த ஊரான ஆக்ரா திரும்பினார். விவசாயத்தில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தில் வீட்டிலேயே காளான் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டார். அவருடன் ரிஷப் குப்தாவின் சகோதரர் ஆயுஷம் இந்தத் தொழிலில் சேர்ந்து கொண்டார். இப்போது தினமும் 1600 கிலோ காளானை அவர்கள் உற்பத்தி செய்கின்றனர். ஆண்டுக்கு 7.5 கோடி வருவாய் ஈட்டுகின்றனர்.
இதுகுறித்து ரிஷப் குப்தா கூறுகையில், ”துபாயில் பார்த்த வேலையை விட்டுத் திரும்பிய பின்னர் மீண்டும் அங்கு செல்ல விரும்பவி்லலை. சொந்த ஊரில் ஏதாவது விவசாயம் பார்க்க விரும்பினேன். எங்கள் குடும்பத்துக்கு சம்ஷாபாத்தில் 3 ஏக்கர் நிலம் உள்ளது. லண்டனில் இருந்த எனது தம்பியும் படிப்பு முடிந்ததும் இந்தியா திரும்பினார்.. இருவரும் சேர்ந்து எங்கள் நிலத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு, வெள்ளரி போன்ற காய்கறிகளை சாகுபடி செய்தோம். பின்னர் காளான் வளர்ப்பில் ஈடுபட்டோம்.
காய்கறி விவசாயத்துக்காக மத்திய வேளாண்துறை அங்கீகரித்த இந்தோ இஸ்ரேல் திட்டமான கரவுண்டா பயிற்சியை பெற்றோம். அதன் பின்னர் 2021 இயற்கை விவசாயத்தை மேற்கொண்டோம். ஆண்டுமுழுவதும் விவசாயத்தில் சம்பாதிக்கும் அளவுக்கு தொழில் செய்ய நினைத்தோம் என்றார். இந்தியாவில் இன்னும் குளிர் சேம்பர்களில் காளான் வளர்க்கும் முறை பிரபலமாகவில்லை. இந்த முறையில் ஆண்டுதோறும் கட்டுப்படுத்தப்பட்ட சீதோஷ்ணநிலையில் காளானை வளர்க்க முடிவெடுத்தோம் என்றார்.
2021 செப்டம்பரில் இயற்கை மண் உரம் வாங்கி காளான்களை நட்டனர். காளான் நன்றாக வளர்ந்தது. இதைத் தொடர்ந்து பட்டன் காளான்களை பெரிய அளவில் அவர்கள் சாகுபடி செய்யத் தொடங்கினர். ஒரு ஏக்கரில் குளிர் சேம்பர், இயற்கை உர ஆலை, பேக்கேஜிங் யூனிட்டை அமைத்தனர்.
இன்றைக்கு ரிஷப்பும் ஆயுஷம் சேர்ந்து தினமும் 1600 கிலோ காளான்களை உற்பத்தி செய்கின்றனர். இதில் 1300 கிலோ ஏ கிரேடு காளான்கள். கோடைக்காலத்தில் காளான்களை 1 கிலோ ரூ.180க்கும் குளிர்காலத்தில் ரூ.90க்கும் விற்கின்றனர். அவர்களது தினசரி வருமானம் ரூ.2.15 லட்சம் ஆகும். மொத்த விற்பனையாளர்கள், கம்பெனிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கின்றனர். காளான் வளர்ப்பு மூலம் இப்போது அவர்கள் வருடத்துக்கு ரூ.7.5 கோடி சம்பாதிக்கின்றனர்.
காசா பள்ளி மீது ட்ரோன் தாக்குதல்..! குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!!