சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை... காவல் ஆய்வாளர் சஸ்பென்ட்...! திருச்சி சரக டிஐஜி அதிரடி நடவடிக்கை...!
சட்டவிரோத கல்குவாரிகளுக்கும் கனிமக்கொள்ளைக்கும் எதிராக போராடிய ஜெகபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, கனிமவளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான இவர், திருமயம் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் குறித்து புகார் அளித்திருந்தார்.
தங்களது புகார் மனுக்கள், அரசு அலுவலகத்தில் இருந்து கசிய விடப்பட்டதாகக் கூறிய நிலையில், கடந்த வாரம் வெள்ளியன்று, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு திரும்பியபோது, லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையில், தனது கணவர் விபத்தில் உயிரிழந்தது குறித்து ஜெகபர் அலியின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார். கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் சட்டவிரோத கல்குவாரிகளுக்கும் கனிமக்கொள்ளைக்கும் எதிராக போராடிய ஜெகபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.