எகிறும் விலை!. தங்கம் வாங்குவதில் NO.1!. சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா!. புள்ளி விவரங்களை வெளியிட்டது உலக தங்க கவுன்சில்!
Gold: தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ. 53 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது. அதே மாதம் 24-ந்தேதி ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலையின் புதிய உச்சமாக கடந்த 19-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 240 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. இதையடுத்து அக்டோபர் 29ம் தேதி முதன்முறையாக 59 ஆயிரத்தை தொட்டது. இந்த நிலையில் உயர்ந்த தங்கம் விலை மீண்டும் குறைய வாய்ப்பில்லை. உயர்ந்த இடத்தில் மீண்டும் உயர்ந்து கொண்டே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், தங்கம் வாங்குவதில் இந்திய நுகர்வோர் சீனர்களை மிஞ்சி விட்டனர் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக தங்க கவுன்சில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள் அதிக கொள்முதல் செய்ததன் மூலம், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், சீனாவுடன் ஒப்பிடும்போது இந்திய நுகர்வோர் 51% அதிகமாக தங்கத்தை வாங்கியுள்ளனர். இந்த காலகட்டத்தில், சீனர்கள் 165 டன் தங்கத்தை வாங்கி உள்ளனர். ஆனால் இந்தியர்கள் 248.3 டன் தங்கத்தை வாங்கியுள்ளனர்.
ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவுக்கு தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் (மூன்றாம் காலாண்டு) இந்தியாவின் தங்கத்திற்கான தேவை 18% அதிகரித்துள்ளது.இதற்கு, தங்கம் மீதான இறக்குமதி வரி 15% லிருந்து 6% ஆக, குறைத்து ஜூலை 23ம் தேதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது தான் காரணம். இந்த ஆண்டில் மூன்றாம் காலாண்டில், சீனர்கள் 103 டன் தங்க நாணயங்கள் மற்றும் பார்கள் வாங்கிய நிலையில், இந்தியர்கள் 172 டன் தங்கம் பார், நாணயம் வாங்கியுள்ளனர். இவ்வாறு தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.
இது குறித்து, உலக தங்க கவுன்சிலின், இந்திய பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி சச்சின் ஜெயின் கூறியதாவது, ஜூலை மாதம் கடைசியில், தங்கம் வாங்கும் நுகர்வோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. செப்டம்பர் மாதம் பாதி வரை, அதிகரித்த வண்ணமே இருந்தது.தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது. தங்கத்தில் முதலீடு செய்வதற்கு, அதிகமான பேர் விரும்புகின்றனர் என்று அவர் கூறினார்.
Readmore: ஸ்பெயின் வெள்ளப்பெருக்கின் கோரத்தாண்டவம்!. பலி எண்ணிக்கை 158 ஆக உயர்வு!. மீட்புப் பணிகள் தீவிரம்!