Smriti Mandhana : ஒரே ஆண்டில் 1,602 ரன்கள் குவித்த வீராங்கனை.. மகளிர் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா..!!
வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்து 9 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 13 பவுண்டரிகள் அடங்கும்.. அவரைத் தொடர்ந்து, பிரதிகா ராவல் 40 ரன்கள், ஹர்லீன் தியோல் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 34 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 31 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஸைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் ஹேலி மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும், டீண்ட்ரா டாட்டின் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் 91 ரன்கள் அடித்ததன் மூலம் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் 1602 ரன்களுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஸ்மிருதி மந்தனா கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; பரபரப்பு.. நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்குதல்.. பூந்தொட்டிகள் உடைப்பு..!!