தேசிய விருது பெற்ற படத்தில் நடித்ததற்காக சிவாஜி வாங்கிய சம்பளம்..!! அதுவும் 65 ஆண்டுகளுக்கு முன்..!!
1942ஆம் ஆண்டு ஜுபிடர் பிக்சர்ஸ் கண்ணகி திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டது. ஜுபிடர் பிக்சர்ஸின் எம்.சோ மசுந்தரம், எஸ்.கே.மொகைதீன் ஆகிய இருவரும் சிறந்த கலாரசிகர்கள். தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தைப் படமாக்குவது என்றதும், அதற்கான திரைக்கதை எழுதும் பொறுப்பை இளங்கோவனிடம் ஒப்படைத்தனர். 1941ஆம் ஆண்டு வெளிவந்த பாகவதரின் வெற்றிப் படம் அசோக்குமாருக்கு அவர்தான் திரைக்கதை எழுதியிருந்தார். பி.யூ.சின்னப்பா கோவலனாகவும், கண்ணாம்பா கண்ணகியாகவும், எம்.எஸ்.சரோஜா மாதவியாகவும் நடிக்க படம் தயாரானது.
சுமார் ரூ.2.5 லட்சத்தில் எடுக்கப்பட்ட கண்ணகி திரைப்படம் 110 நகரங்களில் வெளியிடப்பட்டது. ஒரு கோடிக்கும் அதிகமானோர் படத்தைப் பார்த்தனர். பணம் கொட்டியது. கண்ணகியின் லாபத்தில் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோஸை லீசுக்கு எடுத்து படங்கள் தயாரிக்க ஆரம்பித்தது ஜுபிடர் பிக்சர்ஸ். சி.என்.அண்ணாதுரை திராவிட நாடு பத்திரிகையில் கண்ணகி படம் குறித்து எழுதினார். 50-களின் இறுதியில் கண்ணகி படத்தை ரீமேக் செய்ய எம்.சோமசுந்தரம் திட்டமிட்டார். படம் அண்ணாவுக்கும், ஏஎஸ்ஏ சாமிக்கும் திரையிடப்பட்டது.
புராண, சரித்திரப் படங்கள் வழக்கொழிந்து, சமூகக் கருத்துள்ள படங்கள் முதன்மை பெற்றிருந்த நேரம். கண்ணகியை அப்படியே மறுபடி எடுத்தால், இந்தக் காலகட்டத்தில் வெற்றி பெறுவது கடினம் என்றார் அண்ணா. அவரது கருத்தை சோமசுந்தரமும், ஏஎஸ்ஏ சாமியும் ஏற்றனர். அதேநேரம், தனது கணவனை போராடி மீட்கும் கண்ணகியின் சித்திரம் அவர்களை விட்டு அகலவில்லை. அந்த ஒருவரியில் புதிதாக ஒரு கதையை எழுதுவது என்று தீர்மானித்தனர்.
அந்தக்காலத்தில் ஹாலிவுட்டின் தி எஜிப்தியன் படம் பிரபலமாயிருந்தது. அந்தக் கதையின் பாதிப்பில் அரு.ராமனாதனும், ஏஎஸ்ஏ சாமியும் தங்கப் பதுமை கதையை எழுதினர். அதன் ஸ்கெலிட்டல் வடிவம் அப்படியே கண்ணகியை கொண்டிருந்தது. ஆனால், கதை வேறு. கோவலனை பிரதிபலிக்கும் மணிவண்ணன் என்ற கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசனும், கண்ணகியை பிரதிபலிக்கும் செல்வி என்ற வேடத்தில் பத்மினியும் நடித்தனர்.
மாதவிக்காக மாய மோகினி என்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. ஆண்களை மயக்கும் வசீகர மோகினியாக நடிக்க அஞ்சலி தேவியை அணுகினர். அவர் மறுக்க, இறுதியில் டி.ஆர்.ராஜகுமாரியிடம் வந்தனர். கொல்லும் விழியாள் என்று வர்ணிக்கப்படும் டி.ஆர்.ராஜகுமாரி மாய மோகினியாக நடிக்க ஒப்புக் கொண்டார். அவரே அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தம் என்று சொல்லும் அளவுக்கு மாய மோகினியை தனது நடிப்பால் உயிர்பெறச் செய்தார்.
ஏஎஸ்ஏ சாமி இயக்கத்தில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பில் தங்கப் பதுமை தயாரானது. மணிவண்ணன் சிவாஜிக்கு நிகராக பத்மினியின் செல்வி கதாபாத்திரம் படைக்கப்பட்டிருந்தது. படப்பிடிப்பு இடைவேளையில் ஓய்வு எடுக்காமல் பத்மினி வசனங்களைப் படித்து மனப்பாடம் செய்து நடித்தார். நாயகன், நாயகி இருவருக்கும் சம வாய்ப்பு என்பதால் சிவாஜிக்கு அளித்த ரூ.60,000 சம்பளம் அப்படியே பத்மினிக்கும் வழங்கப்பட்டது. மாதவியாக நடித்த டி.ஆர்.ராஜகுமாரிக்கு ரூ.25,000 வழங்கப்பட்டது.
கண்ணகி படம் எப்படி அதிக நகரங்களில் வெளியிடப்பட்டு வசூலை அள்ளியதோ, அதற்கு நேரெதிராக தங்கப் பதுமையை குறைவான திரையரங்கில் வெளியிட்டு சொதப்பியது படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருந்த ராமகிருஷ்ணன் பிலிம்ஸ். பிறகு அவர்களிடமிருந்து விநியோக உரிமையை ஜெயராமன் பிக்சர்ஸ் வாங்கி சிறந்த முறையில் வெளியிட்டது. படமும் வரவேற்கப்பட்டது. 6-வது தேசிய திரைப்பட விழாவில் தமிழின் சிறந்தப் படத்துக்கான 2-வது பரிசை தங்கப் பதுமை பெற்றது. 1959 டிசம்பர் 10 வெளியான தங்கப்பதுமை இன்று தனது 65-வது வருடத்தை நிறைவு செய்கிறது.