அண்ணா பல்கலை போன்று புதுச்சேரியில் கொடூரம்... மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்கார முயற்சி...!
புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த 3 பேர் கும்பல் காதலனை தாக்கி துரத்திவிட்டு வடமாநில மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து முதலாமாண்டு இளநிலை பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இந்த மாணவி இதே கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், இருவரும் கல்லூரி வளாகத்தில் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த ஜோடியிடம் தகராறு செய்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட மாணவரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்த மாணவியை 3 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பியோட முயன்ற மாணவியை மீண்டும் துரத்தி பிடித்ததோடு, மாணவியை சரமாரியாக தாக்கி கூட்டு பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுதாரித்துக் கொண்ட மாணவி உடனே கத்தி கூச்சலிடவே, பயந்து போன கும்பல் அவரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த மாணவி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பி உள்ளார். பாதிக்கப்பட்டவர் வடமாநில மாணவி என்பதால் காவல்துறைக்கு செல்ல பயந்து, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் வெளியே வந்தால் பல்கலைக்கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் இச்சம்பவத்தை மூடி மறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தவர்களில் 2 பேர் புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியையும், ஒருவர் வில்லியனூர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் கல்லூரி வளாகத்தில் நடந்து திமுக நிர்வாகியான ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் அத்துமீறல் சம்பவம் நடந்து வரும் நிலையில் இதனை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.