பாலூட்டும் பெண்கள் ஆரஞ்ச் பழம் சாப்பிடக்கூடாதா? குழந்தைக்கு செரிமான பிரச்னை ஏற்படுமா?
பழங்கள் மற்றும் காய்கறிகள் ஒரு பாலூட்டும் பெண்ணினுடைய டயட்டின் ஒருங்கிணைந்த பகுதி. பொதுவாக புதிதாக குழந்தை பெற்றெடுத்துள்ள தாய் தனது உணவில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் சேர்க்க வேண்டும்.
ஆனால், தாய் எடுக்க வேண்டிய உணவை பற்றி நிறைய தவறான கருத்துக்கள் உள்ளன. அதில் ஒன்றை பற்றி தான் இங்கே பார்க்க போகிறோம். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பலருக்கு ஆரஞ்சு, நெல்லிக்காய் உள்ளிட்ட பல சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாமா இல்லையா என்று குழப்பம் இருக்கிறது.
புதிதாக பிறந்த குழந்தைகள் முதல் 6 மாதங்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆற்றலுக்கு தாய்ப்பாலையே முற்றிலும் நம்பி இருக்கிறது. எனவே தாய் எதைச் சாப்பிட்டாலும் அது தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்குச் செல்கிறது. குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படும் உணவுகள் தவிர்க்கப்படுகின்றன.இதில் சிட்ரஸ் பழங்கள் மற்றும் உணவுகளும் ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் சிட்ரஸ் பழங்கள் தாய்ப்பாலின் தன்மையை மாற்றி விடும் மற்றும் சிட்ரஸ் பழத்தின் அமிலத்தன்மை குழந்தைக்கு அசிடிட்டியை ஏற்படுத்தும் என்று பல கட்டுக்கதைகள் உள்ளன. ஆனால் உண்மையில் சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி, ஃபிளாவனாய்ட்ஸ் மற்றும் ஃபைபர் உள்ளிட்டவற்றின் வளமான மூலமாகும்.
சிட்ரஸ் பழங்களை தவிர்க்க வேண்டுமா?
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சிட்ரஸ் பழங்களை தவிர்க்க வேண்டியதில்லை என்பதே நிபுணர்களின் கருத்து. சிட்ரஸ் பழங்களில் நிறைந்துள்ள வைட்டமின் சி குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மூட்டுகளை வலுப்படுத்த தேவையான ஊட்டச்சத்து ஆகும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உடல் நலனுக்கும் சிட்ரஸ் பழங்கள் நல்லதே. ஒரு பாலூட்டும் தாய் நாளொன்றுக்கு மூன்று முதல் நான்கு பழங்கள் வரை சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவற்றில் 2 சிட்ரஸ் பழங்களாக இருக்க வேண்டும். அதாவது நாளொன்றுக்கு 2 சிட்ரஸ் பழங்கள் வரை ஒரு பாலூட்டும் தாய் சாப்பிடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. சிட்ரஸ் பழங்கள் தாயின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. தாய் மற்றும் குழந்தையின் நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
மேலும் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் மலச்சிக்கலைக் குறைத்து, தாயை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகின்றன. குழந்தைகளுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிபாடிகள் கிடைக்க சிட்ரஸ் பழங்கள் உதவுகின்றன. தாயின் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கவும் உதவுகிறது. தாய்ப்பாலூட்டும் போது லெமன் வாட்டர் போன்ற சிட்ரஸ் பழச்சாறுகளை ஒரு தாய் எடுத்து கொள்வதன் மூலம், அவருக்கு புத்துணர்ச்சியை ஏற்படுவதோடு குழந்தைக்கு போதுமான பால் வழங்க உதவுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மெர்குரி அடங்கிய கடல் உணவுகள், அதிகப்படியான காஃபின் அல்லது டானின் (tannin) நுகர்வு, அதிக காரம் கொண்ட உணவுகள்,புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.