அதிர்ச்சி..!! கடலை எண்ணெய், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை தாறுமாறு உயர்வு..!! ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா..?
கடந்த செப்.24ஆம் தேதி கச்சா பாமாயில், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி 5.5%இல் இருந்து 27.5%ஆகவும், சுத்திகரிக்கப்பட்ட மேற்கூறிய எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி 13.75%இல் இருந்து 33.75 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்ட நிலையில், சமையல் எண்ணெய் வகைகளின் விலை அதிகரித்து வருகிறது.
உள்நாட்டு விவசாயிகள் உற்பத்தி செய்யும் எண்ணெய் வித்துப் பயிா்களுக்கு உரிய ஆதரவு விலை கிடைப்பதற்காக இந்த வரி உயா்வு அமல்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது சமையல் எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளதால், ஏழை, நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் வகைகளின் விலை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் வகைகளின் விலை முறையே 45 சதவீதம், 26 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. தேங்காய் எண்ணெய் 38 சதவீதம், கடலை மற்றும் நல்லெண்ணெய் 5 - 7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி எண்ணெய் விற்பனையக உரிமையாளா் எஸ். மணி உள்ளிட்டோா் கூறுகையில், ”பொதுவாக தீபாவளி சமயத்தில் தேவை அதிகரிப்பால் எண்ணெய் விலை உயா்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக, பண்டிகைகள் நிறைவடைந்த பிறகான டிசம்பா் மாதத்தில் விலை உயா்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி வரியை திடீரென 20% அதிகரித்ததே இதற்குக் காரணம்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்களை விட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்களின் விலை தாறுமாறாக உயா்ந்துள்ளது” என்று தெரிவித்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாத விலை... தற்போதைய விலை நிலவரம் :
பாமாயில் - ரூ. 100 - ரூ. 148
சூரியகாந்தி எண்ணெய் - ரூ. 125 - ரூ. 165
கடலை எண்ணெய் (முதல் தரம்) - ரூ. 185 - ரூ. 205
நல்லெண்ணெய் (முதல் தரம்) - ரூ. 320 - ரூ. 350
தேங்காய் எண்ணெய் - ரூ. 190 - ரூ. 255