டெல்லிக்கு அடுத்து சென்னைக்குமா.? ஆயுட்காலம் குறையும் ஆபத்து.? ஷாக்கிங் ரிப்போர்ட்.!
சென்னை நகரம் வரலாறு காணாத வகையில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போகிப் பண்டிகையின் போது குப்பைகளை எரித்ததால் ஏற்பட்ட புகை காரணமாக காற்று மாசுபாட்டின் அளவு AQI இண்டக்சில் 700ஐ தாண்டி இருப்பதாக வெளியாகி இருக்கும் புள்ளிவிவரம் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் பூவுலகு சுந்தர்ராஜன் கூறி இருக்கும் தகவல் மக்களை அச்சமடையச் செய்வதாக அமைந்திருக்கிறது.
இது தொடர்பாக பேசியிருக்கும் பூவுலகு சுந்தர்ராஜன் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னையில் காற்று மாசுபாடு பல மடங்கு உயர்ந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டு போகி ஆயுட்காலம் பண்டிகையை முன்னிட்டு பழைய குப்பைகளை எரித்ததால் காற்று மாசுபாடு மூன்று மடங்கு உயர்ந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் கடந்து சில ஆண்டுகளாகவே சென்னையில் காற்றின் மாசுபாடு அளவு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் . உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை படி காற்று மாசுபாடு அளவு AQI இண்டக்சில் 10 முதல் 20 வரை இருக்கலாம் என்று தெரிவிக்கிறது.
இந்திய அரசாங்கமும் 50 வரை காற்று மாசுபாடு இருந்தால் கவலைப்பட தேவையில்லை என அறிவித்திருக்கிறது. எனினும் சென்னையின் காற்று மாசுபாடு அளவு AQI இன்டெக்ஸ் படி 700 ஆக இருக்கிறது. இது பல மடங்கு அதிகமாகும். சென்னையின் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் 709 வரை அதிகரித்திருப்பதாக பூவுலகு சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையின் மற்ற பகுதிகளில் 400 தாண்டி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த அளவு மாசுபட்ட காற்றை சுவாசிப்பது 36 சிகரெட்கள் குடிப்பதற்கு சமம் எனவும் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு இது நம் உடலை தாக்கும் எனவும் எச்சரித்து இருக்கிறார்.
இந்த காற்று மாசுபாட்டால் பனிமூட்டத்தோடு சேர்ந்து புகை மூட்டமும் சென்னை நகரை சூழ்ந்து இருக்கிறது. மேலும் போகி பண்டிகை தினத்தின் போது 18 விமானங்கள் புகைமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அளவிற்கு டெல்லியைப் போன்று காற்று மாசுபாடு தமிழகத்திலும் ஏற்பட்டிருக்கிறது. சென்னை அருகே கடல் இருப்பதால் டெல்லியைப் போன்று அதிக பாதிப்பு ஏற்படாமல் தப்பித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாட்டால் மக்களின் ஆயுட்காலம் 10 வருடங்கள் குறைந்திருக்கிறது. மேலும் சென்னையிலும் டெல்லியை போன்ற காற்று மாசுபாடு ஏற்பட்டிருப்பது பொது மக்களின் ஆயுட்காலத்தை குறைக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். போகிப் பண்டிகையின் போது பழையன கழித்தல் என்பது நம்மிடம் இருக்கும் பழைய பொருட்களை எரிப்பது அல்ல. சிந்தனையில் பழைய எண்ணங்களை கழித்து புதிய எண்ணங்களை புகுத்த வேண்டும் என்பதுதான். ஆனால் மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை எரிப்பதன் மூலம் காற்றை மாசுபடுத்துகின்றனர் எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார். காற்று மாசுபாடு என்பது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் மிகவும் பாதகமான விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரித்து இருக்கிறார்.