ஷாக்கில் ரிப்போர்ட்..!! மதுரையில் ரேபிஸ் நோயால் 32 பேர் உயிரிழப்பு..!! 5 ஆண்டுகளில் 1,33,523 பேருக்கு சிகிச்சை..!!
மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் கடித்து 32 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவு சுற்றி திரியும் நிலையில், பொதுமக்களை கடித்து காயம் ஏற்படுவதோடு ஏராளமான சிறுவர், சிறுமியர்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், ஆர்.டி.ஐ., ஆர்வலரான N.G.மோகன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாய்கடி பாதிப்பு சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டுள்ளார்.
அதில், ”கடந்த 2020 ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 20,123 பேர் ரேபிஸ் சிகிச்சை பெற்றதோடு, அதில் 10 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 523 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில் ரேபிஸ் நோயால் 32 நபர்கள் உயிரிழந்தள்ளதாகவும்” ஆர்.டி.ஐ. மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பேசிய RTI ஆர்வலர் மோகன், ”மதுரை மாநகராட்சி பகுதிகளில் அதிகளவுக்கு தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கான கருத்தடை சிகிச்சை அதிகளவிற்கு செய்ய வேண்டும். மாநகராட்சி தரப்பில் கருத்தடை செய்வதாக கூறினாலும் கூட தொடர்ந்து தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை குறித்து உடனடியாக கணக்கீட்டு ஆய்வு நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.