ஷாக்கிங் ரிப்போர்ட்..!! பணியிடங்களில் ஆண்டுக்கு 30 லட்சம் தொழிலாளர்கள் உயிரிழப்பு..!!
உலகம் முழுவதும் பணியிடங்களில் நேர்ந்த விபத்து உள்ளிட்ட காரணங்களால் ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பணியிடங்களில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில், பணியிடங்களில் நிகழ்ந்த விபத்து, நோய்த் தொற்று காரணமாக ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் மட்டும் 63% மரணங்கள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் பணியிடங்களில் நிகழ்ந்த மரணங்களில் 7 லட்சத்து 45 ஆயிரம் பேர் உயிரிழந்ததற்கு 55 மணி நேரம் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு, புகை போன்ற காரணங்களால் நான்கரை லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், பணியிடங்களில் நிகழ்ந்த விபத்துகளால் காயமடைந்து 3 லட்சத்து 63 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி இடங்களில் நிகழும் விபத்துகளை தடுக்க தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை உலகம் முழுவதும் 187 உறுப்பினர் நாடுகளில் 79 நாடுகள் மட்டும் அங்கீகரித்துள்ளன. உத்தராகண்டில் சுரங்க விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கியதும், இந்தியா இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அங்கீகரிக்க வேண்டும் என்று மத்திய வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.