ஷாக்!. டெங்கு பாதித்து மத்திய அமைச்சர் மனைவி உயிரிழப்பு!.
RIP: மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சரான ஜுவல் ஓரமின் மனைவி ஜிங்கியா ,டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 58.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று ஜுன் 9-ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்து தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமரானவர் என்ற சிறப்பை மோடி பெற்றிருக்கிறார். நரேந்திர மோதியுடன், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், நிதின் கட்கரி ஆகிய, முந்தைய மத்திய அமைச்சரவையில் இருந்தவர்கள் மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். மேலும் மோடி அமைச்சரவையில் சில புதிய முகங்களும் இடம்பெற்றுள்ளனர். அதில் ஒருவர்தான் ஜுவல் ஓரம். இவர், மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
இவரது மனைவி ஜிங்கியா. இந்தநிலையில், இவர் நீண்ட நாட்களாக டெங்குவால் பாதிக்கப்பட்டு ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஜிங்கியா நேற்றுஇரவு (சனிக்கிழமை) உயிரிழந்தார். மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரமும் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புவனேஸ்வரில் உள்ள லும்பினி விஹாரில் உள்ள அவரது இல்லத்தில் மறைந்த ஜிங்கியா ஓரமின் உடலுக்கு, முதல்வர் மோகன் சரண் மாஜி, சபாநாயகர் சுரம பதி மற்றும் பல அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, அவரது உடல் சுந்தர்காருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டுள்ளன.