"கத்தாரில் விடுதலையான முன்னாள் கடற்படை வீரர்கள்.. தூதுவராக சென்றாரா ஷாருக்கான்"? உண்மையில் நடந்தது என்ன.?
இந்திய கடற்படையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்கள், இஸ்ரேல் நாட்டிற்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அந்நாட்டு முதன்மை நீதிமன்றம், முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை வழங்கியது. கத்தார் நாட்டில் உள்ள அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற கம்பெனியில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேர் ஆலோசகர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் கத்தார் நாட்டை பற்றிய உளவு ரகசியத்தை இஸ்ரேலிடம் தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவருக்கும், கத்தார் முதன்மை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. இந்நிலையில் இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக டிசம்பர் மாதம் இவர்கள் 8 பேர் மீதான மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் ரத்து செய்தது.
அவர்களுக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்களின் விடுதலைக்காக இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேரும், நேற்று இந்தியா வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் 8 பேரின் விடுதலை தொடர்பாக சுப்பிரமணிய சுவாமி பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார்
இது தொடர்பாக பேசியிருந்த சுப்பிரமணிய சுவாமி " இந்திய பிரதமர் மோடி முன்னாள் கடற்படை வீரர்களின் விடுதலை தொடர்பாக கத்தார் மன்னரிடம் பேசுமாறு, ஷாருக்கானுக்கு கோரிக்கை வைத்ததாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஷாருக்கான் கத்தார் மன்னருடன் பேச்சுவார்த்தை நடத்தி, முன்னாள் கடற்படை வீரர்கள் விடுதலை ஆனதாகவும் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்துக்களுக்கு ஷாருக்கான் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்ட வழக்கில் நமது இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் ராஜதந்திரிகள் ஆகியோரின் முயற்சியினால் முன்னாள் கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஷாருக்கான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.