ஷபாலி வர்மா அபாரம்!. ஹாட்ரிக் வெற்றி!. அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி!
Womens Asia Cup T20:மகளிர் ஆசிய கோப்பை டி20ல், நேபாளத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இலங்கையில் மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஏற்கனவே, லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது இந்திய அணி. இந்தநிலையில், ராங்கிரி அரங்கில் நேற்று நடந்த லீக்போட்டியில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. கேப்டன் ஹர்மான்பிரீத், பூஜாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், ஸ்மிருதி மந்தனா கேப்டனாக செயல்பட்டார்.
அதன்படி, தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஷபாலி வர்மா – ஹேமலதா இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 122 ரன் சேர்த்தது. ஹேமலதா 47 ரன் (42 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஷபாலி 81 ரன் (48 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மகர் பந்துவீச்சில் அவுட்டாகினர். சஜனா 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதன்படி, 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது இந்திய அணி. ஜெமிமா 28 ரன் (15 பந்து, 5 பவுண்டரி), ரிச்சா 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
179 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாள அணி, ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் ஆடியது. இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். ஓபனராக களமிறங்கிய சீதா ராணா மகர் அதிகபட்சமாக 18 ரன்கள் எடுத்தார். சம்ஜானா 7 ரன்கள், கபிதா கன்வர் 6 ரன்கள், இந்து வர்மா 14 ரன்கள், ருபீனா சேத்ரி 15 ரன்கள் என அடுத்தடுத்த விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 96 ரன்களே எடுத்திருந்தது நேபாள அணி. இதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.
Readmore: தமிழகமே…! குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு உணவு, தங்குமிடம்…! அரசு அசத்தல் அறிவிப்பு…!