கேரளா போன்றே தமிழ் திரையுலகிலும் பாலியல் சுரண்டல்... நடிகை சனம் ஷெட்டி பகீர் குற்றச்சாட்டு...!
கேரளா திரையுலகத்தில் நடப்பது போன்ற பாலியல் சுரண்டல் தமிழ் திரையுலகத்திலும் நடக்கிறது என சனம் ஷெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
மலையாள நடிகர் திலீப் பாலியல் சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து, மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலின சமத்துவமின்மை தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடத்திய அந்தக் குழு கடந்த 2019 டிசம்பரில் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் 233 பக்க அறிக்கையை, ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பித்தது.
மலையாள திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள் என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பல முறை பாலியல் ரீதியான சுரண்டல்கள் நடைபெறுவதாகவும், ஆபத்தான சூழல் நிலவுவதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சனம் ஷெட்டி; கேரளா திரையுலகத்தில் நடப்பது போன்று தமிழ் திரையுலகத்திலும் நடக்கிறது. தன்னுடைய சொந்த வாழ்க்கையிலேயே அது போன்று நிகழ்வுகளும் நடந்துள்ளது. கேரளா அரசு வெளியிட்டுள்ள நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.