பரபரப்பு...! பாலியல் குற்றவாளி ஞானசேகரன் திடீரென மருத்துவமனையில் அனுமதி...!
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மட்டுமே இவ்வழக்கில் தொடர்பு உள்ளது என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்தது.
ஆனால், வழக்கின் பின்னணியில் முக்கியப் பிரமுகர்கள் சிலரும் உள்ளனர். அவர்களை காப்பாற்ற அரசும், காவல் துறையும் முயல்கிறது என அதிமுக, பாஜக, பாமக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் புக்யா சினேஹா பிரியா, அய்மன் ஜமால், பிருந்தா ஆகியோர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவினர் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஞானசேகரனின் வீட்டில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். மேலும், கைது செய்யப்பட்டிருந்த ஞானசேகரனிடமும் விசாரணை நடத்தினர். அதேபோல், அவரிடமிருந்து ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை சைபர் க்ரைம் காவல்துறை வழங்கி அதில் சேமித்து வைத்திருந்த வீடியோக்களையும் கைப்பற்றினர். கடந்த வாரம் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . கடந்த மாதம் கைதான அவர், கீழே விழுந்ததில் கை, கால்களில் கட்டு போடப்பட்டது. இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு இன்று காலை வலிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. உடனடியாக அவர் சிறைக்காவலர்களால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.