கடும் பொருளாதார நெருக்கடி!. குழந்தைகளுக்காக உணவை குறைத்துக்கொள்ளும் பெற்றோர்கள்!. கனடாவின் அவலம்!
Canada: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் கனடாவில் 25 சதவீத பெற்றோர், குழந்தைகளுக்கு உணவளிக்க தங்கள் உணவை குறைத்து கொள்கிறார்கள் என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
வட அமெரிக்க நாடான கனடா, உலகெங்கும் இருந்து பொருளாதார மேம்பாட்டுக்காக புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் கனவு தேசமாக ஒரு காலத்தில் இருந்தது. அந்த நாட்டில் பின்பற்றப்பட்ட தாராள கொள்கைகள், அனைத்து நாடுகளில் இருந்தும் மக்களை ஏற்றுக் கொண்டு அரவணைத்தன. இப்போது நிலைமை வெகுவாக மாறிவிட்டது.
பல்வேறு தவறான முடிவுகளை மேற்கொண்டதன் விளைவாக, அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கனடா கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது. மளிகை பொருட்கள் விலை உச்சம் தொட்டு வருகிறது. இந்த சூழலில், அங்குள்ள மக்களிடம், லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ஒரு சர்வதேச தொண்டு நிறுவனமான சால்வேஷன் ஆர்மி ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.
இது குறித்து வெளியான ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: 25% கனடா பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க தங்கள் உணவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பணவீக்கம், உயர்ந்து வரும் நிலையில், வீட்டு வாடகைகள் மற்றும் மளிகை பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஆகும் செலவு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளான உணவைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றன.
90% க்கும் அதிகமானோர் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளை ஈடு செய்ய, தங்கள் மளிகைச் செலவைக் குறைத்துள்ளனர். பல குடும்பங்கள் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் மலிவான விலையில் சத்துள்ள உணவை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பெற்றோர் தங்கள் உணவு அல்லது அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய கடுமையாக போராடுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதை சுட்டிக்காட்டி, இந்தியர்களை உள்ளடக்கிய சர்வதேச மாணவர்களை, கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சால்வேஷன் ஆர்மி தொண்டு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் முர்ரே கூறுகையில், 'தங்களுடைய அன்றாட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கனடா மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்' என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது' என்றார்.
Readmore: பெய்ரூட்டை குறிவைத்த இஸ்ரேல்!. அடுத்தடுத்து 12 முறை தாக்குதல்!. 22 பேர் பலி!